அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

Published Date: October 20, 2022

CATEGORY: ECONOMY

சென்னை, அக்.20: தமிழ்நாட்டின் நிதிப் பற்றாக்குறை 3.38 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆண்டுக்கு ரூ.1,240 கோடி வட்டி கட்டுவது குறையும் என்று சட்டசபையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

துணை பட்ஜெட் மீது விவாதம்

தமிழக சட்டசபையில் நேற்று முன்தினம் 2022-2023-ம் நிதி ஆண்டின் கூடுதல் செலவினங்களுக்காக ரூ.3,796 கோடிக்கு துணை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த துணை பட்ஜெட் மீது சட்டசபையில் நேற்று விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தில் பங்கேற்று உறுப்பினர்கள் விஜயதரணி(காங்கிரஸ்), டாக்டர்.எழிலன்(திமுக), ஜி.கே.மணி(பாமக), ஈஸ்வரப்பன்(திமுக), சிந்தனை செல்வன்(விடுதலை சிறுத்தைகள் கட்சி), சின்னதுரை (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி) ஆகியோர் பேசினார்கள்    .

நிறைவாக, நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நிதிப் பற்றாக்குறை குறைப்பு

இறுதிக்கணக்கில் வருவாய் மற்றும் நிதிப்பற்றாக்குறை கூடுதலாக ரூ.9 ஆயிரம் கோடி குறைந்திருப்பதனால், ஒரு சாதனை அளவாக கடந்த வருடம் இருந்த 4.61 சதவீதம் நிதிப்பற்றாக்குறை 2021-22-ம் ஆண்டில் 3.38 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு அறிவித்த கடன் எல்லைக்குள் மிகவும் குறைவாக வந்ததனால், மாநிலத்தின் சுயமரியாதையையும், கடன் வாங்கும் சக்தியையும் அதிகரித்திருக்கிறோம். உலகப் பொருளாதார நெருக்கடி வரும் என்ற அச்சத்தில் இருக்கும் சூழ்நிலையில், இனிமேல் அதுபோன்று வந்தால், தேவையான கடனை வாங்குவதற்கான திறனை உருவாக்கியிருக்கிறோம்.

ரூ.1,240 கோடி வட்டி குறையும்

நிதிப்பற்றாக்குறையை குறைத்ததனால், ஆண்டுக்கு ரூ.1,240 கோடி வட்டித் தொகையினைக் குறைத்து இருக்கிறோம். இது சாதாரண காரியம் அல்ல. உலகத்திலேயே சிறப்பான ஆலோசனையைப் பெறுவதால் முதலமைச்சர்    மு.க.ஸ்டாலின் கொடுக்கும் பாதுகாப்பினால் வரும் விளைவு இது.

நான் ஒரு உறுதியைக் கொடுக்க விரும்புகிறேன். என்னைப் பொறுத்த வரைக்கும் அரசியலில் என்னை உருவாக்கியவர் தலைவர் மு.க.ஸ்டாலின். எனக்கு வாய்ப்பளித்தது அவர். எனக்கு வழிகாட்டி அவர். எனக்கு ஆதரவும், உற்சாகமும் கொடுப்பவர் அவர். என்னைப் பாதுகாப்பாக வைத்திருப்பவர் அவர்.

உறுதி

எனவே, என் தலைவர் மீது நான் வைத்துள்ள நம்பிக்கையினால் சொல்கிறேன். ஒருவேளை உலகப் பொருளாதார சரிவு வந்தால், ஏற்கனவே எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கையினால் மற்ற மாநிலங்களை விடவும், மத்திய அரசை விடவும், தமிழ்நாட்டில் பாதிப்பு குறைவாக இருக்கும் என்ற உறுதியை நான் இங்கு அளிக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Media: Dhinathanthi